search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீல் வைப்பு"

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அனுமதியற்ற மற்றும் வீதி மீறிய 1400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இது குறித்து மார்ச் 11-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்மாறும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி 1415 கட்டிடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. கொடைக்கானலில் மார்ச் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு விதிமீறிய கட்டிடங்கள் நெறிமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தமிழக நகர, ஊரமைப்பு, வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ்லக்காணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வரும் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும். எனினும் இதற்கும் கோர்ட்டு நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கூறினர்.

    இதனையடுத்து கோர்ட்டு நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தகோரி கொடைக்கானல் நகர் முழுவதும் ஓட்டல்கள், விடுதிகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    நேற்று விதி மீறிய கட்டிடங்கள் மீது சீல் வைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆணையர் முருகேசனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    இது குறித்து பதில் அளித்த ஆணையர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வியாபாரிகள் நீண்ட நேரம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து பின்னர் வெளியேறினர்.

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொடைக்கானலை சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நேற்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விதிமுறை மீறிய, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 258 வணிக கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். இன்று முதல் இப்பணி தொடங்க வேண்டும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போடி, தேனி, கம்பம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இன்று காலை 10 முதல் இப்பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானலில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.

    இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.

    திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.

    இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    ‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.

    ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.

    எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #BanSterlite #MKStalin
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரசாரமாக கூறினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்  என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2013ல் நாங்கள் ஆலையை மூடுவதுபோல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள் என்ற கண் துடைப்பு நாடகத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் நடத்தியதை போல், இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால் உரிய சட்டமுறைகளின் படியும், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டியும் ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிட்டு உத்தரவிடுவதே உரிய தீர்வாக அமையும் என பதிவிட்டுள்ளார். #BanSterlite #MKStalin
    ×